அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஏர்வாடி மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. திருமணம், மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம். நமதூர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.

Sunday, April 10, 2011

நெல்லையில் தொடரும் கொலைகள் - பொதுமக்கள் பீதி!

நெல்லை மாநகர பகுதியில் தொடரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிகப்படியான காவல்துறையினர் பாதுகாப்பு உள்ள நேரத்தில், மர்மமான முறையில் நேற்று நள்ளிரவில் ஒருவர் கொலை செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுப்பு (48). மேலநத்தம் அதிமுக பிரதிநிதியான இவர் கொக்கிரகுளத்தில் பால் பண்ணை நடத்தி வந்தார். கடந்த மாதம் 9ம் தேதி இரவு தச்சநல்லூரிலுள்ள மகள் சுதா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது உடையார்பட்டி திருமண மண்டபம் அருகே அவரைக் கூலிப்படையினர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

மேலப்பாளையம் அருகே உள்ள மேலகருங்குளம் பீடி காலனியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம் (47) கூலி தொழிலாளி. இவர் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனை அவரது மகன் செய்யது அலி (19) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் செய்யதுஅலி வீட்டிலிருந்த விறகு கட்டையை எடுத்து அப்துல் ரஹீமைத் தாக்கினார். இதில் அவர் இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து செய்யது அலியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று, நெல்லையில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ரவுடி முத்துக்கிருஷ்ணன்(32) கள்ளத்தொடர்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் முருகன் என்பவரைப் பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தாழையூத்து நாரணம்மாள்புரம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஐஜி சண்முகராஜேஷ்வரன், எஸ்பி விஜயேந்திர பிதாரி, தாழையூத்து டிஎஸ்பி கனகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 1.5 கிமீ தூரம் ஓடி சென்று நின்றது. கொலை செய்த மர்ம ஆசாமிகளைப் பிடிக்க தாழையூத்து இன்ஸ்பெக்டர் சங்கர்ராவ் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டவர் கள்ளதொடர்பு அல்லது அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் இத்தொடர் கொலைகளால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

முஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா? என்ற தலைப்பில் ஜீனியர் விகடனில் வெளிவந்துள்ள கட்டுரை




முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து, தி.மு.க.

கூட்டணியில் முஸ்​லிம் லீக்கும், அ.தி.மு.க. கூட்ட​​ணியில் மனிதநேய மக்கள் கட்சியும் வரிந்து கட்டிக் களத்தில் நிற்கின்றன. இரண்டு கழகங்களும், இந்தக் கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகளை ஒதுக்கி இருக்கின்றன. இரண்டு முஸ்லிம் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்!

மனிதநேய மக்கள் கட்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்​றக் கழகத்தின் அரசியல் பிரிவு​தான் மனிதநேய மக்கள் கட்சி. இரண்டாவது முறையாக தேர்த​லை சந்திக்கும் இந்தக் கட்சிக்கு அ.தி.மு.க. அணியில், 'புதியதமிழகம்,’ சரத்குமாரின் 'சமத்துவ மக்கள் கட்சி’களைவிடக் கூடுதல் இடம். இந்தக் கட்சியின் சின்னம்... மெழு​குவத்தி.

ராமநாதபுரம்

ம.ம.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாவை எதிர்த்து, தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ​-வான அசன் அலி களத்தில் இருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்​ஷேவின் நண்பரான அசன் அலியும், கடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தொகுதியில் தலை காட்டுவதால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மேலும் இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் இவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் ஓட்டுகள் கணிசமாக ஜவாஹிருல்லாவுக்குத்தான்.

சில மாதங்களுக்கு முன்பு பெரிய பட்டணத்தில் நடந்த படகு விபத்தில் சிலர் இறந்தனர். ''இது என் தொகுதிக்குள் இல்லை!'' என்று அசன் அலி ஒதுங்கிக்கொண்டார். அந்த சம்பவம் குறித்து அங்கே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி, ''பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாகத் தர வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்து, ஆம்புலன்ஸ் சேவையிலும் ஈடுபட்டார் ஜவாஹிருல்லா. ''ரத்த தானம் செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறோம். சுனாமி சமயத்தில் நாங்கள் ஆற்றிய மீட்புப் பணிகளை மக்கள் மறக்க மாட்டார்கள்!'' என்று ம.ம.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்கிறார்கள்.

பிரசாரத்தில் பேசும் ஜவாஹிருல்லா, ''பம்மன் வைப்பாறு திட்டம், கடலில் கலக்கும் நீரைத் தடுத்து தடுப்பு அணைகள் கட்டுதல், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையை மேம்படுத்துதல், பாதாள சாக்கடைத் திட்டம், ராமேஸ்வரம் புனிதத் தலத்துக்கு அடிப்படை வசதிகள் செய்தல், கச்சத் தீவு மீட்பு, மீனவர் உயிருக்​குப் பாதுகாப்பு ஆகியவற்றை நிச்சயம் செய்து காட்டுவோம்...'' என்கிறார். மொத்தத்தில் மெழுகுவத்தி... பிரகாசமாக ஒளிர்கிறது!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

ம.ம.க-வின் துணைப் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி வேட்பாளர். பத்திரிகையாளர், கவிஞர், சமூக சிந்தனையாளர் என்று பன்முகம்கொண்டவர். துடிப்புமிக்க இளைஞர்கள், மாணவர்கள் படை அவருக்குப் பின்னால் தோள் கொடுக்​கிறது. ''கடந்த மூன்று தேர்தல்களில் இங்கே போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி, இப்போது உங்களைக் கை கழுவிவிட்டு திருவாரூக்கு ஓடிவிட்டார். அங்கே போட்டியிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் முடிவு செய்துவிட்டதால், சேப்பாக்கம் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தி.மு.க-வின் ஜெ.அன்பழகன், சினிமா விநியோகஸ்தர். அவர் எம்.எல்.ஏ-வாகி என்ன சாதிப்பார்? மக்களைப்பற்றிக் கவலைப்படுவாரா?'' என்று முழங்கும் தமிமுன் அன்சாரியின் பிரசாரம் படுவேகத்தில் இருக்கிறது. இந்தத் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 'ஜெயலலிதாவின் பிரசாரத்துக்குப் பிறகு அன்சாரியின் வெற்றி உறுதியாகிவிடும்’ என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்!

ஆம்பூர்

புதிதாக உருவாக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியில் நிற்கும் ம.ம.க. வேட்பாளர் அஸ்லம் பாஷாவுக்கு எதிராக, காங்கிரஸின் விஜய் இளஞ்செழியன் நிற்கிறார். 'இந்தத் தொகுதியில் எப்படியாவது ஸீட் வாங்கிவிட வேண்டும்!’ என்று காங்கிரஸ் பிரமுகர் பாலூர் சம்பத் கடைசி வரை போராடியும் ஸீட் கிடைக்கவில்லை. ஆகவே, இப்போது அவர் போட்டி வேட்பாளர். சம்பத்துக்குத் தொகுதிக்குள் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால், இளஞ்செழியனுக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். கதர் சட்டைகளுக்குள் நடக்கும் மோதல் காரணமாக அஸ்லம் பாஷா முன்னேறிக்கொண்டு இருக்கிறார். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். அதனால், இப்​போ¬​தய நிலவரப்படி அஸ்லம் பாஷாவின் வெற்றி, கனிந்தே இருக்கிறது!

முஸ்லிம் லீக்

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் லீக், இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில்தான் களத்தில் குதித்து இருக்கிறது. தொகுதிப் பங்கீடு நேரத்தில் முதலில் மூன்று தொகுதிகள் கிடைத்தன. அதன் பிறகு இரண்டாகக் குறைக்கப்பட்டு, கடைசியில் மீண்டும் மூன்று தொகுதிகளே வழங்கப்பட்டன.

துறைமுகம்

திருப்பூர் அல்தாப் உசேன், இங்கே வேட்பாளர். பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த 'தமிழ் மாநில தேசிய லீக் கட்சி’யின் தலை​வராக இருந்தவர். ஆனால், ஒரு முறைகூட இவருக்குத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வாய்ப்புத் தரவில்லை. அதன் பிறகு தன் கட்சியை, முஸ்லிம் லீக்கோடு இணைத்தார். இப்போது வேட்பாளராக நிற்கிறார். இதனால், முஸ்லிம் லீக் கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. அல்தாப் வெற்றி பெற்றால், முஸ்லிம் லீக் கட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்று அவரைத் தோற்கடிக்க, கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடக்கின்றனவாம்.

முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஓட்டுகளை நம்பியே ஓடிக்கொண்டு இருக்கிறார் அல்தாப். ஏற்கெனவே, பூங்கா நகர் தொகுதியில் இருந்த சௌகார்பேட்டை போன்ற பகுதிகள், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, துறைமுகம் தொகுதியில் சேர்க்கப்பட்டன. மார்வாடி இன மக்கள் சௌகார்பேட்டையில் கணிசமாக வசிப்பவர்கள். அவர்களின் ஓட்டுகள் எப்போதுமே தி.மு.க-வுக்கு விழுந்தது கிடையாது. மேலும் எதிர் அணியில் அ.தி.மு.க. வேட்பாளரான பழ.கருப்பையாவின் பிரசாரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள் துறைமுகம் தொகுதியில் இருக்கின்றன. அதை அல்தாப் நம்பிக்கொண்டு இருந்தாலும், பழகருப்பையாதான் ரேஸில் முந்துகிறார்!

நாகப்பட்டினம்

முக்கியக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில், நான்காவது இடத்தில் இருக்கிறார் நாகையில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷேக் தாவூத். நகர்ப் பகுதிகளிலும் முஸ்லிம் ஜமாத்துகளிடம் மட்டுமே ஓட்டு கேட்டு வருகிறார். மிகப் பெரிய தொழில் அதிபர். கப்பல்கள், தொழிற்சாலைகள், வைர வியாபாரம் என்று பசை உள்ள பார்ட்டியாக ஷேக் தாவூத் இருந்தாலும், 'அவரிடம் இருந்து பணம் எதுவும் வந்து சேரவில்லை’ என்று தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சியினர் புலம்புகிறார்கள். வேட்பு மனுத் தாக்கலின்போது, விண்ணப்பத்தில் சில இடங்களில் அவர் கையெழுத்துகூடப் போடவில்லை. இதைக் கவனித்த தி.மு.க. எம்.பி-யான ஏ.கே.எஸ்.விஜயன், 'இதைக்கூடவா சரியா செய்யத் தெரியாது!’ என்று நொந்துகொண்டார். பிரசாரத்துக்கு கனிமொழி வந்தபோதும், தி.மு.க-வினர் சரியான அளவில் கூட்டம் சேர்க்கவில்லை. பணம் இறங்கட்டும் என்று வேலை செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ''ஷேக் தாவூத் நல்ல தொழில் அதிபர். ஆனால், அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார்!'' என்று தி.மு.க-வினரே முணுமுணுக்கிறார்கள். கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஜெயபால், அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார். இந்த முறை ஜெயித்தே தீருவது என்ற முடிவில் தீவிரமாக இவர் வேலை பார்க்கிறார். தொகுதிக்குள் இருக்கும் 40 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள்தான் ஷேக் தாவூத்துக்கு ஆறுதல் அளிக்கின்றன. கடைசி நேரத்தில் வாக்காளர்கள் மனம் மாறினால், ஜெயபாலுக்கு ஜெயம் கிடைக்கும்!

வாணியம்பாடி

சிட்டிங் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் பாசி மீண்டும் களத்தில் நிற்கிறார். ''அப்துல் பாசி, தொகுதிக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை!'' என்று பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. தொகுதியில் அடிப்படை வசதியான சாலை வசதிகள்கூட ஒழுங்காக இல்லை. இதோடு, தி.மு.க. நகரச் செயலாளர் சிவாஜி கணேசன், தனக்கு ஸீட் தராததால் உள்ளடி வேலைகளில் இறங்கிவிட்டார். இந்தத் தொகுதியில் பெரிதாக எந்த சாதனையும் செய்யாததால், தி.மு.க. அரசின் சாதனைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கையும் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார் அப்துல் பாசித்.

இவருக்கு எதிரே அ.தி.மு.க. சார்பில் கோவி.​சம்பத்குமார் நிற்கிறார். புதுமுகம் என்றாலும், தொகுதி மக்களுக்கு அறிமுகம் என்பதால், சுறுசுறுவென தேர்தல் வேலை செய்கிறார். அப்துல் பாசித் மீது இருக்கும் அதிருப்தியும், தி.மு.க-வினரின் உள் குத்து காரணமாகவும் சம்பத்குமாருக்கு நல்ல யோகம்!

Saturday, April 9, 2011

நாங்குநேரி கோதாவில் வெற்றி யாருக்கு?


நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா நான்கு முறையும், திமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வென்ற வசந்தகுமாரே இந்த முறையும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி கட்சியான சரத்குமாரின் சமகவுக்கு நாங்குநேரியை விட்டுக்கொடுத்தது. இங்கு அக்கட்சியின் அவைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வசந்தகுமார் பிரபலமானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே வேளையில் நாடார்பேரவையின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நாராயணன் அச்சமுதாயத்தினருக்கு நன்கு அறிமுகமானவர்தான்.

குதி மறு சீரமைப்பில் தேவர் சமுதாய வாக்குகள் இங்கு அதிகம் உள்ளது. 2வதாக நாடார் சமுதாய வாக்குகளும், மூன்றவதாக யாதவர் மற்றும் தலித் வாக்குகளும் உள்ளன.

பொதுவாக தேவர் சமுதாய வாக்குகள் திமுக அணியைவிட அதிமுக அணியே அதிகம் அறுவடை செய்யும். ஆனால் சமக வேட்பாளர் நாராயணனுக்கு அது விழுமா? என்பது கேள்விக்குறி. வசந்தகுமாரைப்றுத்தவரை பொம்மை எம்.எல்.ஏ. என்று நாடார் சமுதாய மக்களிடம் பெயர் வாங்கி உள்ளார். தனது இயல்பான, பண்பான நடவடிக்கையால் தொகுதியைக் கவர்ந்துள்ளபோதிலும் குறிப்பிடும்படியான திட்டங்கள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று தொகுதி முழுவதிலும் உள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் யாதவர் மகாசபை சார்பில் அதன் தலைவர் தேவநாதன் யாதவ் களம் இறங்கி உள்ளார். இதுதவிர பாஜக வேட்பாளரும் கோதாவில் குதித்துள்ளார்.

தேவநாதன் யாதவ் தனது சமுதாய வாக்குகளை எவ்வளவு பிரித்தாலும் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது காங். வேட்பாளர் வசந்தகுமார் என்று கூறுகின்றனர். அதே வேளையில் தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட பாளை ஒன்றிய பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்களில் அதிகத்தை அவர் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

தலித் வாக்கு வங்கியோ தேவர்கள் விழுந்து ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராகவே திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இடியாப்ப சிக்கலில் தவிக்கும் நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமாரும், நாராயணனும் கடுமையான போட்டியில் உள்ளனர்.

இவர்களில் யாராக இருந்தாலும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிக்கனியை பறிக்கமுடியும் என்பதே இன்றைய நிலை.

இறுதிகட்டத்தில் பிரசார வியூகம், பணப் பட்டுவாடா சங்கதிகள் ஏதாவது மாயாஜாலம் நடந்தால் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே வெற்றி வசந்தகுமாருக்கு மீண்டும் வசப்படுமா அல்லது நாராயணன் வசம் செல்லுமா? என்பது ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்களின் `கை'யில்தான்!

எங்க கிளம்பிட்டீங்க! இதக் கொஞ்சம் பாருங்க!!

Friday, April 8, 2011

ஸ்டாலின் எப்படி முதல்வராக முடியும் - அழகிரி!


திமுக அணி வெற்றி பெற்றால் துணை முதல்வராக இருக்கும் ஸ்டாலின் முதல்வரா என்ற கேள்விக்கு, "இது என்ன கேள்வி? திமுக அணி வெற்றி பெற்றால் 6 வது முறையாக கலைஞரே முதல்வராவார் என்று கூட்டணிக் கட்சிகளே கூறி வரும் நிலையில் ஸ்டாலின் எப்படி முதல்வராக முடியும்?" என்று அழகிரி எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் 6 முறை மட்டுமன்றி 7 வது முறையும் கலைஞரே தமிழக முதல்வராக வருவார் என்று தாம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார் அழகிரி.

என் டி டி வி செய்தியாளருக்குப் பேட்டி அளித்த மு.க.அழகிரி தமிழ்நாடு மக்கள் மீது எனக்கு பாசம் அதிகம் என்றும் கலைஞரின் வழியில் தாமும் மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் டெல்லி அரசியலைத் தாம் விரும்புவதில்லை என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மாநில அரசில் உங்களுக்குப் பதவி தரப் படுமா என்ற கேள்விக்கு, வெற்றி பெற்ற பின்னர் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் அழகிரி.

ம.தி.மு.க - தி.மு.க. விரைவில் இணையும் - கருணாநிதி சூசகம்!


ம.தி.மு.க.வும் தி.மு.க.வும் விரைவில் ஒன்றிணையும் என தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்திருந்த கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளி்த்தார்.

அப்போது ம.தி.மு.க. வைச் சார்ந்த பிரமுகர்கள் தி.மு.க வுக்கு ஆதரவாக பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, "தமிழகத்தில் விரைவில் ஒன்றுபட்ட திராவிட இயக்கம் உருவாகும்" என தெரிவித்தார். ம.தி.மு.க. வின் சில மாவட்ட செயலாளர்கள் வரும் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ம.தி.மு.க.வினர் வாக்களிப்பர் என பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இலவச திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். உலகக்கோப்பையை வென்ற நமது இந்திய அணிக்கு அறிவித்துள்ள பரிசுத் தொகையை வழங்க அனுமதி பெற்றுள்ள போதிலும் அதிகக் கெடுபிடிகள் தருவதை அவர் சுட்டிக் காண்பித்தார்.

தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது மின் பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் என தெரிவித்த தமிழக முதல்வர் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் தொடரும் என குறிப்பி்ட்டார். இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 1,10,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.