அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Thursday, June 10, 2010

எட்டாம் வகுப்புவரை பெயிலாக்கக் கூடாது - ஓர் இஸ்லாமியப் பார்வை

உலகிலுள்ள மதங்கள் எல்லாம் இறைவழிபாடுகுறித்து மட்டுமே போதிக்கின்றன. தம்மதக் கடவுளை எந்தெந்த முறைகளில் வழிபட வேண்டும். எத்தனைமுறை வழி படவேண்டும். எப்போது வழிபட வேண்டும் என்று முழுக்க முழுக்க வழிபாடு குறித்தே போதிக்கின்றன.

இஸ்லாத்தில் இறைவழிபாடு பிரதானமாக இருந்த போதிலும் மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிடுகிறது. பிறப்பு முதல் இறப்புவரைக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்று அக்குவேறு ஆணிவேறாக வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் அலசுகிறது.

அவ்வகையில், கல்விக்கு இஸ்லாத்தில் பிரதான முன்னுரிமை உண்டு. போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட எதிரிப்படையினரை விடுவிக்க கல்வியறிவுள்ள வீரர்கள், கல்வியறிவில்லாத முஸ்லிம்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துவிட்டு விடுதலை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் சிறப்பான அந்தஸ்தை அளித்த மார்க்கம் இஸ்லாம்.

"கல்வி கற்பது ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை" என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரகடனப்படுத்தி விட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. "கற்றவரும் கல்லாதவரும் சமமாக மாட்டார்கள்" என்று திருக்குர்ஆன் பொட்டிலடித்தாற்போல் சொல்கிறது. ஆக, கல்வி இஸ்லாத்தின் ஓர் அங்கம்!

கல்வி சம்பந்தமான நேற்றைய செய்தி. பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

கல்வி பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று 1993 ஆம் ஆண்டும்,அடிப்படைக் கல்வியை தடையின்றி பெறுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று 2002-ம் ஆண்டிலும் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினடிப்படையில் அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இப்படித்தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், மகளிர் பாதுகாப்புச் சட்டம் என பல்வேறு அருமையான சட்டங்களையும் தற்போதைய மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஏட்டளவில் இந்தச் சட்டங்கள் இருந்து கொண்டிருந்தாலும் சட்டமாக்கப்பட்டதை வரவேற்க வேண்டும்

இதுபோன்ற புரட்சிகரமானச் சட்டங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இஸ்லாத்தின் சட்டங்களே காரணமாக இருக்கின்றன என்பதையும் (வெட்கத்தை விட்டுச்) சொல்லியிருக்கலாம்.(நம் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிகூட “அரபு நாடுகளைப்போல் மரண தண்டனை வழங்கினால்தான் நம்நாட்டில் கற்பழிப்புகளை குறையும்” என்றார்.)

ஆக, இஸ்லாம் வழங்கிய அடிப்படை மனித உரிமையான கல்வியை சாதாரண இந்தியக் குடிமகன் பெறுவது உரிமை என்று சட்டமியற்ற சுமார் 1500 வருட தாமதம் கொஞ்சம் தவறு ரொம்ப அதிகம்தான்

No comments:

Post a Comment