அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, April 10, 2011

நெல்லையில் தொடரும் கொலைகள் - பொதுமக்கள் பீதி!

நெல்லை மாநகர பகுதியில் தொடரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிகப்படியான காவல்துறையினர் பாதுகாப்பு உள்ள நேரத்தில், மர்மமான முறையில் நேற்று நள்ளிரவில் ஒருவர் கொலை செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுப்பு (48). மேலநத்தம் அதிமுக பிரதிநிதியான இவர் கொக்கிரகுளத்தில் பால் பண்ணை நடத்தி வந்தார். கடந்த மாதம் 9ம் தேதி இரவு தச்சநல்லூரிலுள்ள மகள் சுதா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது உடையார்பட்டி திருமண மண்டபம் அருகே அவரைக் கூலிப்படையினர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

மேலப்பாளையம் அருகே உள்ள மேலகருங்குளம் பீடி காலனியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம் (47) கூலி தொழிலாளி. இவர் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனை அவரது மகன் செய்யது அலி (19) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் செய்யதுஅலி வீட்டிலிருந்த விறகு கட்டையை எடுத்து அப்துல் ரஹீமைத் தாக்கினார். இதில் அவர் இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து செய்யது அலியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று, நெல்லையில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ரவுடி முத்துக்கிருஷ்ணன்(32) கள்ளத்தொடர்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் முருகன் என்பவரைப் பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தாழையூத்து நாரணம்மாள்புரம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஐஜி சண்முகராஜேஷ்வரன், எஸ்பி விஜயேந்திர பிதாரி, தாழையூத்து டிஎஸ்பி கனகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 1.5 கிமீ தூரம் ஓடி சென்று நின்றது. கொலை செய்த மர்ம ஆசாமிகளைப் பிடிக்க தாழையூத்து இன்ஸ்பெக்டர் சங்கர்ராவ் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டவர் கள்ளதொடர்பு அல்லது அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் இத்தொடர் கொலைகளால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

No comments:

Post a Comment