அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Saturday, April 9, 2011

நாங்குநேரி கோதாவில் வெற்றி யாருக்கு?


நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா நான்கு முறையும், திமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வென்ற வசந்தகுமாரே இந்த முறையும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி கட்சியான சரத்குமாரின் சமகவுக்கு நாங்குநேரியை விட்டுக்கொடுத்தது. இங்கு அக்கட்சியின் அவைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வசந்தகுமார் பிரபலமானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே வேளையில் நாடார்பேரவையின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நாராயணன் அச்சமுதாயத்தினருக்கு நன்கு அறிமுகமானவர்தான்.

குதி மறு சீரமைப்பில் தேவர் சமுதாய வாக்குகள் இங்கு அதிகம் உள்ளது. 2வதாக நாடார் சமுதாய வாக்குகளும், மூன்றவதாக யாதவர் மற்றும் தலித் வாக்குகளும் உள்ளன.

பொதுவாக தேவர் சமுதாய வாக்குகள் திமுக அணியைவிட அதிமுக அணியே அதிகம் அறுவடை செய்யும். ஆனால் சமக வேட்பாளர் நாராயணனுக்கு அது விழுமா? என்பது கேள்விக்குறி. வசந்தகுமாரைப்றுத்தவரை பொம்மை எம்.எல்.ஏ. என்று நாடார் சமுதாய மக்களிடம் பெயர் வாங்கி உள்ளார். தனது இயல்பான, பண்பான நடவடிக்கையால் தொகுதியைக் கவர்ந்துள்ளபோதிலும் குறிப்பிடும்படியான திட்டங்கள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை என்று தொகுதி முழுவதிலும் உள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் யாதவர் மகாசபை சார்பில் அதன் தலைவர் தேவநாதன் யாதவ் களம் இறங்கி உள்ளார். இதுதவிர பாஜக வேட்பாளரும் கோதாவில் குதித்துள்ளார்.

தேவநாதன் யாதவ் தனது சமுதாய வாக்குகளை எவ்வளவு பிரித்தாலும் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது காங். வேட்பாளர் வசந்தகுமார் என்று கூறுகின்றனர். அதே வேளையில் தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட பாளை ஒன்றிய பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்களில் அதிகத்தை அவர் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

தலித் வாக்கு வங்கியோ தேவர்கள் விழுந்து ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராகவே திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இடியாப்ப சிக்கலில் தவிக்கும் நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமாரும், நாராயணனும் கடுமையான போட்டியில் உள்ளனர்.

இவர்களில் யாராக இருந்தாலும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிக்கனியை பறிக்கமுடியும் என்பதே இன்றைய நிலை.

இறுதிகட்டத்தில் பிரசார வியூகம், பணப் பட்டுவாடா சங்கதிகள் ஏதாவது மாயாஜாலம் நடந்தால் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே வெற்றி வசந்தகுமாருக்கு மீண்டும் வசப்படுமா அல்லது நாராயணன் வசம் செல்லுமா? என்பது ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்களின் `கை'யில்தான்!

No comments:

Post a Comment