அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Sunday, June 6, 2010

சாதனை படைத்த சமுதாயச் செல்வி ஜாஸ்மின்அறிவு தேடும் கல்விப் போட்டியில் கடந்த மாதம் வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் தமிழக முஸ்லிம் மாணவ-மாணவியர் வரலாற்றில் சாதனை படைத்து, மாநிலத்தின் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நெல்லைச் செல்வி யாஸ்மின்.

கடந்த 26.05.2010 அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வை, தமிழகத்தைச் சேர்ந்த 4,34,223 மாணவியரும் 4,22,523 மாணவர்களும் எழுதியிருந்தனர். மொத்தம் 8,56,745 (எட்டு லட்சத்து, ஐம்பத்தாறாயிரத்து, எழுநூற்று நாற்பத்தைந்து) மாணவ-மாணவியரைப் பின்னுக்குத் தள்ளி 495/500 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கும் ஜாஸ்மின் பயில்வது நெல்லை மாநகராட்சியின் கல்லணை பெண்கள் மேநிலைப் பள்ளியில்!

செல்வி ஜாஸ்மின் பெற்ற மதிப்பெண்கள்
தமிழ்
98/100
ஆங்கிலம்
99/100
கணிதம்
100/100
அறிவியல்
100/100
சமூக அறிவியல்
98/100
மொத்தம்
495/500
பள்ளிக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு ஆயிரங்களை அள்ளிக் கொடுத்து, அதற்குமேல் சீருடைமுதல் சிறப்புப் பயிற்சிவரை பெருங்காசு செலவு செய்து கான்வெண்டில் படிக்க வைக்கும் பல மாணவ-மாணவியர், அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாமல், படிப்பில் 'சுமாராக'வே திகழ்வதைப் பார்க்கிறோம். விதிவிலக்காகக் கல்வியில் ஒளிர்பவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில், ஒரு மாநகராட்சிப் பள்ளியில் பயின்று மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கும் செல்வி ஜாஸ்மின், கல்வியில் வெல்லும் சில பொதுஉத்திகளைக் கடைப்பிடித்திருக்கிறார். அவை நம் அனைவரின் மீள்சிந்தனைக்கும் உரியவை:
கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டுவது,
விடாமுயற்சி
ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதலாவதாக வருவதற்கு முனைப்பு,
பள்ளியில் நடக்கும் பாடங்களை ஒத்திப் போடாமல் அன்றே வீட்டிலும் படித்துக் கொள்வது,
வெளியில் சென்று ட்யூஷன் படித்து நேரத்தை வீணாக்காதது,
தொலைக்காட்சி பார்க்காமல் தவிர்த்தது
கடந்த ஆண்டுகளில் நடந்தேறிய எஸ்.எஸ்.எல்.ஸி, +2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்த மாணவ-மாணவியர், தாம் வெற்றிபெற்றதற்குக் கூறிய தலையாய காரணமாகக் குறிப்பிட்டது "நிஜ வாழ்க்கையைத் தொலைக்கத் தூண்டும் தொலைக்காட்சிகளைப் பார்க்காமல்" தொலைத்துக் கட்டியதைத்தான் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அது, வெறும் தகவல் மட்டுமன்று; மற்றெவரைக் காட்டிலும் கல்வியில் மிகப் பின்தங்கிவிட்டவர்களான முஸ்லிம் சமுதாய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் கட்டாயம் நினைவில் கொள்ளத் தக்க அறிவுரையாகும்.

மிகச்சிறு வியாபாரியாகவே 17 ஆண்டுகள் ஜவுளி வியாபாரம் செய்துவரும் தந்தை ஷேக்தாவூதுக்கு மகளாக, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, இந்த ஆண்டின் எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற செல்வி ஜாஸ்மினை சத்தியமார்க்கம்.காம் உளம் நிறைந்து வாழ்த்துகிறது!

கல்லணை மகளிர் மேநிலைப் பள்ளியின் ஆசிரியர்களைப்போல் தங்கள் பள்ளி மாணவர்களின் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபடும் ஆசிரியர்கள் எல்லாப் பள்ளிகளும் நிறைய வேண்டும்.

செல்வி ஜாஸ்மினைப்போல், ஷா ஃபைஸலைப்போல் பல்லாயிரம்பேர் நம் சமுதாயத்தில் உருவாக வேண்டும்; கல்வியில் முஸ்லிம் சமுதாயம் மிக்குயர்ந்து நிற்க வேண்டும்!

அல்லாஹ், தன் பேரருளைப் பொழிய வேண்டும்.

No comments:

Post a Comment