
நாகர்கோவில், ஜூலை 16: கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பொய்யானத் தகவல்களை தெரிவிப்போர் மீது காவல்துறை மூலம் 24 மணி நேரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓராண்டு நிறைவு விழா மற்றும் பயனாளிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 385 ஆம்புலன்சுகள் 108 சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த எண்ணிக்கையை 545-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 7,584 அவசர அழைப்புகளுக்கு இந்த சேவை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 1612 பிரசவங்களுக்கும், 2692 சாலை விபத்துகளுக்கும், 269 இதய நோய்களுக்கும், 613 காவல்துறை தேவைகளுக்கும், 7 தீயணைப்புத்துறை தேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையால் கடந்த ஓராண்டில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 416 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது 9 இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
108 ஆம்புலன்சுக்கு பலர் பொய்யானத் தகவல்களை அளிப்பதால், உண்மையாகவே இந்தச் சேவை தேவைப்படுவோருக்கு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அத்தகைய தவறான அழைப்புகள் குறைவு. இதுபோன்று தவறான அழைப்புகளை அழைக்கும் நபர்களின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு காவல்துறை மூலம் 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
ஆம்புலன்ஸ் சேவை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உயிர் காப்பாளர் விருது மற்றும் தன்னார்வ சான்றிதழ்களை ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வழங்கினார்.
No comments:
Post a Comment